பைசன் / தெக்கத்தி மண்ணின் வாசனை வீசும் கபடி விளையாட்டை
அந்த மக்களின் வாழ்வியலுடன், அந்த நிலத்தின் அரசியலுடன் சேர்த்து
உணர்ச்சிக்கொந்தளிப்புடன் காளமாடனுக்கு படையல் வைப்பது போல நம்முன் படையல்
வைத்திருக்கிறார் மாரி செல்வராஜ்.
அரசியல் ஒரு சாக்கடை என்று நீங்கள் சொல்லலாம்,,அரசியலுக்குள் நான்
இல்லை,,,அரசியல் எனக்கு பிடிக்காது,,,,அரசியல் எனக்கு தெரியாது என்று
நீங்கள் எந்த வார்த்தையையும் உச்சரிக்கலாம். ஆனால் உங்கள் வாழ்க்கையை
அரசியல் தான் தீர்மானிக்கிறது, உங்கள் படிப்பை அரசியல் தான்
தீர்மானிக்கிறது, உங்கள் தேர்வுகளை அரசியல் தான் தீர்மானிக்கிறது உங்களது
புதிய இரண்டாயிர ருபாய் நோட்டை அரசியல் தான் தீர்மானிக்கிறது.
அப்படி தெக்கத்திய அரசியல் மற்றும் ஜாதிப்பிரச்சினைகளுக்கு (இங்கு
அரசியலே ஜாதி மதங்களால் ஆனது தானே) நடுவே மாட்டிக்கொண்ட கிட்டான் என்கிற
கதாபாத்திரம் எப்படி அலைக்கழிக்கப்படுகிறது என்பதை சுவாரஸ்யம் குறையாத
நான் லீனியர் திரைக்கதையமைப்பில் அற்புதமாக மாரி விவரிக்கிறார்.
அர்ஜீனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையைத் தழுவி
எழுதப்பட்ட திரைக்கதை.
வழக்கமாக ஸ்போட்ஸ் டிராமா திரைப்படங்கள் விளையாட்டு குழுவின் அரசியல்,
அதற்குள் உள்ள சதிகள், விளையாட்டின் விதிமுறைகள், பயிற்சியாளர் சொல்லி
தருகிற விதிகள், மாற்றுவிதிகள், குறுக்கு வழிகள்,விளையாட்டு வீரனின்
குடும்பம் மற்றும் அவனின் மனக்குழப்பங்கள் தடுமாற்றங்கள் இவைகளைத் தான்
நாம் பல்வேறு திரைப்படங்களில் பார்த்திருப்போம்.
சர்பேட்டா பரம்பரை திரைப்படத்தில் ஒருவன் வெற்றியை சுவைக்க விடாமல்
அரசியல் எப்படி பாதிக்கிறது என்பதை ரஞ்சித் சென்னை நகர பின்னணியில்
வரலாற்று நிகழ்வுகளுடன் சொல்லியிருந்தார்.
அதே போன்று தெக்கத்திய மண்ணின் ஆன்மாவோடு அங்கு நிலவும்
சாதிப்பிரச்சினைகள், சண்டைகள், கொந்தளிப்புகள் எப்படி சாக்கடைக்கும் கீழே
வாழ விதிக்கப்பட்டிருக்கும் ஒருவனின் வாழ்வை துண்டாடுகிறது என்பதை அத்தனை
அழுத்தமாக கொந்தளிப்புடன் கண்ணீருடன் நம் முன் வைக்கிறார் மாரி.
ஏன் இந்த ஊர விட்டு ஓடனும்?
இனிமே என்னால ஓடமுடியாது
ஏன் என்னை இந்த ஊருல இருக்கிற கபடி டீம்ல சேத்துக்கமாட்டேனு சொல்றாங்க?
உன் காலத்துல உங்கப்பா காலத்துல உங்க தாத்தா காலத்துக்கு முன்னாடி
இருக்கிற பிரச்சினை என்னை ஏன் விளையாட விடாமல் தடுக்கிறது?
காதலிக்க விடாமல் தடுக்கிறது என்று துருவ் கேட்கும் போது
ஏன்னா அதான்டா நம்ம விதி என்று பசுபதி சொல்லிவிட்டு அழும் போது சிறந்த
துணை நடிகருக்கான தேசிய விருது பசுபதிக்கு இந்த திரைப்படத்திலாவது
கிடைக்கவேண்டுமென மனம் அடித்து கொள்கிறது
சர்பேட்டா பரம்பரை திரைப்படத்தில் அத்தனை வித்யாகர்வத்தோடு கம்பீரமாக ஒரு
வாத்தியாராக நடித்திருந்த பசுபதி இந்த திரைப்படத்தில் கையாலாகாத
சம்சாரியாக கூனி குறுகி தன் கோவக்கார பையனை ஒரு கோழிக்குஞ்சு போல
கைக்குள்ளே வைத்து பொத்தி பாதுகாக்கிற கதாபாத்திரத்தில் கதறுகிறார் சண்டை
போடுகிறார்
முதுமை காரணமாக சண்டை போடமுடியாமல் விழுந்து கிடக்கிறார்
அழுகிறார் கொந்தளிக்கிறார் வெறி கொண்டு சாமியாடுகிறார்
ஒரு துளியில் கூட பசுபதி என்ற நடிகன் தெரிந்து விடாமல் தோற்று போன
சம்சாரியாக திரையில் தெரிகிறார்.
இத்தனை ஆண்டுகளாக மழைக்கு காத்திருக்கும் பூமி போல அழகான
கதாபாத்திரங்களுக்காக காத்திருந்து காத்திருந்து நடிக்கிறார்.
அது பெரிய ஆன்ம பலம்.
வாழ்த்துகள் பசுபதி சார்.
ஒரு கெடாவை பஸ்ஸில் அழைத்துப்போக முடியாத அளவிற்கு சாதி நெருக்கடிகள்
தென்தமிழகத்தை ஆட்டிப்படைக்கிறது என்பதை அந்த கெடாவின் ரத்தத்தோடு அந்த
காட்சி விரியும் போது பரிமேறும் பெருமாளில் வருகிற கருப்பி நினைவுக்கு
வந்து விட்டாள்
மாரியின் படங்களில் வருகிற விலங்குகள் கதையின் ஆன்மாவாகவே இருக்கின்றன.
எனக்கு தெரிந்து வேறு எந்த சினிமாவிலும் விலங்குகளை அழகியல் படிமமாக
அரசியல் படிமமாக வைத்து கொண்டு காந்திரமாக கதை சொன்ன வேறு இயக்குநர்
எனக்கு தெரிந்து யாரும் இல்லை. பரிமேறும் பெருமாளில் நாய் கர்ணனில்
குதிரை மாமன்னனில் பன்றி இப்போது காளமாடன்.
மூன்றே காட்சிகளில் எத்தனை அழகான கவித்துவமான காதல் கதையை நம் முன்
வைக்கிறார். மஞ்சனத்தி வாசத்தை காதலில் கலந்து உதிரும் சருகுகளாக
பறக்கவிடுகிறார்.
துருவ் படம் நெடுக பேசும் வசனம் ஒரு பக்கம் அளவு கூட இருக்காது ஆனாலும்
கபடி களத்தில் அவர் கபடி விளையாடுகிற காளமாடன் உடல் மொழியும் படம் நெடுக
காணும் கிராமத்து மண்சாலைகளிலும் சென்னை வீதிகளிலும் ஜப்பான் விளையாட்டு
அரங்கிலும் அவர் ஓடிக்கொண்டேயிருக்கும் போது வெளிப்படுத்தும் உடல் மொழி
ஆயிரம் உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தையற்றவனின் உடல் மொழி.
அவனை பாடச்சொன்னால் இந்த ஜனம் கேட்டு தீராத பாடலை ஆண்டுக்கணக்காக பாடித்
தீர்ப்பான் அப்படியிருக்கிறது துருவின் உடல் மொழி.
அந்த மொழி நம்முடன் பேசியவண்ணம் இருக்கிறது
வழக்கமாக தமிழ் கதாநாயகர்கள் நக்கல் நையாண்டிகளில் கலகலவென்று பேசி
ரசிகர்களை கவர்வார்கள் இதில் தன் உடல் மொழியால் திரை முழுக்க
நிறைந்திருக்கிறார் துருவ்.
நம் வீடுகளில் வளர்ந்து நிற்கிற நிஜ ஊமை மாடனாக ஒரு பையன் இருப்பான்
அவனை துருவ் நினைவு படுத்துகிறார். நான் என் இளமைப்பருவத்தில்
இப்படித்தான் இருந்தேன் என் மகனும் இப்போது அப்படி தான் இருக்கிறான் தன்
உணர்வுகளை வார்த்தைகளால் வெளிப்படுத்தத்தெரியாத ஒரு ஊமைக்கொட்டான் என்று
செல்வார்கள் அப்படி ஒரு பையன் தன் கனவை நோக்கி செல்லும் போது நம் வீட்டு
பையன் ஜெயிக்கவேண்டுமென்ற ஆசையில் துருவ் கபடியில் வெல்லும் போது
திரையில் விசில் பறக்கிறது
விளையாட்டின் இறுதி தருணங்களில் பசுபதி கண்களை பொத்திக்கொள்வதைப்போல
விளையாட்டின் இறுதி தருணத்தை காணமுடியாமல் ஐய்யோ நம்ம புள்ளை ஜெயிக்கனுமே
என்று நாமளும் கண்களை பொத்திக்கொள்கிறோம்.
துருவ் வெல்லும் போது பசுபதி போல நாமும் நம் கண்களை நனைக்கிறோம்.வெல்வது
யாருக்கும் எளிதல்ல ஐநூறு மைல்களுக்கு அப்பால் உள்ள குக்கிராமத்தில்
இருந்து வெளியேறி வந்து வெல்வது சாதாரண வெற்றியல்ல அதனாலே நகரத்தின்
மாபெரும் திரையரங்கில் படம் பார்த்த அத்தனை வெற்றியாளர்களின் கண்களிலும்
கண்ணீர் பூக்கிறது.
பரிமேறும் பெருமாள்,கர்ணன்,மாமன்னன்,வாழை,பைசன் என மாரி செல்வராஜின்
வலிகள் சொல்லி அடங்காமல், சொல்லில் உறையாமல்,சொல்லி ஆறாமல், அழுது
ஆற்றாமல், எத்தனை ஒப்பாரிகளுக்கு பின்பும் இன்னும் இன்னும் ஆங்காரமாக,
துளி கங்கு அணையாமல், சாம்பல் இந்த பெருநிலமெங்கும் கதைகளாக பாடல்களாக
திரை வண்ணங்களாக பறந்து பரவிய வண்ணம் இருக்கிறது.
ஒரு எழுத்தாளன் ஒரு கவிஞன் திரைக்குள் இயக்குநராக நுழைந்தால் என்ன
நடக்குமோ, என்ன அதிசயங்கள் நடக்குமோ, அது இந்த ஐந்து திரைப்படங்களில்
நடந்திருக்கிறது.
நகரத்தின்,வெற்றியின் எந்த சொகுசும் மாரியின் ரத்தத்தில் கலக்கவில்லை
என்பதற்கு இந்த படங்களே சாட்சி.
எத்தனை புறக்கணிப்புகளை சந்தித்த ஆத்மாவாக இருந்தால் இடையறாது தன்
ஒப்பாரிகளை சொல்லியவண்ணம் இருக்கும். இது மாரி செல்வராஜ் என்கிற தனி
மனிதனின் வலியல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளாக சாதியின் பெயரால்
புறக்கணிப்புகளை,வலிகளை அனுபவித்த தலைமுறையின் பாடல். அந்த தலைமுறைகளின்
ஆற்றாத கண்ணீர் தான் மாரியின் திரைப்படங்கள்.
தொடர்ந்து ஐந்து படங்களாக கமர்சியல் சினிமா என்கிற பசியோடு அலைகிற
சிங்கத்திடம் சிக்காமல் திரை அழகியலுடன் திரைப்படம் எடுத்து வெற்றி
பெறுவது என்பது உண்மையில் சாதாரண சாகசம் அல்ல.
பெரிய சாகசம்.
எதிர்மறை எண்ணங்களும் கருத்துகளும் குவியும் சமூக வலைதளங்கள்
அதில் கொட்டப்படும் லட்சக்கணக்கான விமர்சனங்கள்
இன்ஸ்டாவில் வாழும் gen z இளைஞர்களின் காலத்தில் ஒரு படம் வெற்றி பெறுவது
என்பது அரிதிலும் அரிதான விசயம்.
தன் நெஞ்சை கோடாரியால் ரெண்டாகப் பிளந்து நிற்கிற உண்மையான கலைஞனாகவே
மாரியை நான் பார்க்கிறேன்.
அவர் படங்களில் ஒப்பனைகள் இல்லை. அலங்காரங்கள் இல்லை. நிலப்பரப்பில்
இருந்து பெண்கள் வரை யாரும் கவர்ச்சியாக இல்லை. அதிரடி சண்டைக்காட்சிகள்
இல்லை.
எதை நீங்கள் அருவறுக்கிறீர்களோ அதை அழகாக்கி உங்கள் முன் காட்சி
பிம்பங்களாக படைக்கிறார்.சாதிகளால் கட்டப்பட்ட அந்த ஏழாம் உலகம் நமக்கு
நம் சமூகத்தின் நிஜங்களைப் புரிய வைக்கிறது. நம்மை புதுப்பிக்க
மாற்றிக்கொள்ள அவரின் திரைப்படங்கள் உதவுகின்றன.
வெறும் மெலோடிராமா வகை இயக்குநர் என்று என்னை சுருக்க முடியாது ஆக்சன்
படங்கள் எடுக்கக்கூடிய இயக்குநரும் தான் என்பதை மாரி இந்த படத்தில் வரும்
இரண்டு கொலை முயற்சிகளைப் பார்க்கும் போது நமக்கு குலை நடுங்குகிறது.
வாழ்த்துகள் மாரி
தெக்கத்திய மண்ணின் ஆத்மா உங்கள் ஆத்மாவோடு இரண்டற கலந்திருக்கிறது.
தமிழ் சினிமாவின் பெருஞ்செல்வம் நீங்கள்.
அன்புடன்
G.Vasanthabalan
film director