இணைப்பில் உள்ள படம் நேற்று சனிக்கிழமை அமெரிக்காவெங்கும் நடந்த போராட்டங்களைப் பற்றிய செய்தியில் வந்த படம். “மன்னர்கள் வேண்டாம்” (No Kings Protest) என்ற முழக்கத்தின் கீழ் அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும் நடந்த போராட்டத்தில் நியூ யார்க்கின் மன்ஃகாட்டன் பகுதியில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதியை இது காட்டுகிறது.
இந்தப் படத்தின் பின்னணியில் உள்ள அமெரிக்க அரசியலைப் பற்றியதல்ல இந்தப் பதிவு. ஆனால், இந்தப் படம் அமெரிக்காவைப் பற்றிய பல செய்திகளைத் தருகிறது. அந்தச் செய்திகள் இந்தியாவின், தமிழ்நாட்டின் எதிர்பார்ப்புகளுக்கு முரணானது என்பதையும் சொல்லியாக வேண்டும்.
எந்த நாட்டிலுமே போராட்டங்களில் செல்வந்தர்களும், உயர்குடி மக்களும் நேரடியாகக் கலந்து கொள்வதைத் தவிர்ப்பார்கள். அப்படி அவர்கள் கலந்து கொண்டால், அந்தப் போராட்டங்களால் அவர்களுக்கு எந்தவித இடர்ப்பாடும் இருக்காது. அவை அடையாளப் போராட்டங்கள் மட்டுமே.
அதேபோல், நடுத்தட்டுக் குடும்பங்களின் எதிர்பார்ப்புகளும் வேறு. அவர்களுக்குத் தத்தம் வேலைகள், தங்கள் பிள்ளைகளின் படிப்பு, வருங்காலத் திட்டமிடல் இவையே முதன்மையானவை. தெருவில் இறங்கிப் போராட்டம் செய்பவர்களை வேலையற்ற வீணர்கள் என்றுதான் இவர்கள் கருதுவார்கள். ஆனாலும் போராட்டங்களால் விளையும் பலன்கள் எல்லாவற்றையும் உறிஞ்சிக் கொள்வதில் இவர்கள்தாம் முன்னணியில் நிற்பார்கள், வெற்றியும் அடைவார்கள். காட்டாக, இந்திய விடுதலைப் போராட்டத்திலோ, இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலோ, இடப்பங்கீட்டுப் போராட்டத்திலோ, அணுவுலை எதிர்ப்புப் போராட்டத்திலோ, இன்ன பிற போராட்டங்களிலோ, நடுத்தட்டுக் குடும்பங்கள் கலந்து கொள்வதைத் தவிர்க்கும். மீறி அவர்களுடைய பிள்ளைகள் கலந்து கொள்வதையும் கண்டிக்கும். ஆனால், பலன்கள் மிகப்பெரும்பாலும் நடுத்தட்டு மக்களுக்குத்தான் சென்று சேரும்.
போராட்டங்களில் கலந்து கொண்டு, தடியடி பட்டு, உயிரைக் கொடுப்பவர்கள் மிக, மிகப் பெரும்பாலும் அடித்தட்டு மக்கள்தான். அதனால்தான், காவல்துறை அவர்கள் மீது கடுமையான தாக்குதல்களை ஏவ முடிகிறது. போராளிகளைச் சுட்டுக்கொல்ல முடிகிறது. விலக்காக, சல்லிக்கட்டுப் போராட்டத்தைப் போல் நடுத்தட்டு மக்கள் தங்கள் குடும்பங்கள், குழந்தைகளோடு கலந்து கொள்ளும்போது, ஆளும் வர்க்கம் அவற்றை நசுக்கத் தயங்கும். இதில் சாதி வேறுபாடு ஏதும் பெரிதாக இல்லை. வர்க்க நிலைதான் இவற்றைத் தீர்மானிக்கிறது. இதையேதான் அமெரிக்காவிலும் பார்க்கலாம்.
1960 களில் அமெரிக்காவின் குடியுரிமைப் போராட்டங்கள் மிகப்பெரும்பாலும் அடித்தட்டு மக்களான அமெரிக்கக் கறுப்பின மக்களின் போராட்டங்கள். அவற்றில் பல வெள்ளையின யூதர்களும், வெள்ளையினக் கிறித்தவர்களும், இடதுசாரியினரும் கலந்து கொண்டாலும், அடிப்படையில் அவை ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள். அவற்றை இரும்புக்கை கொண்டு நசுக்க அரசுகள் தயங்கவில்லை.
அதே சமயத்தில், வியட்நாம் போருக்கு எதிரான மாணவர் போராட்டங்கள், மிகப்பெரும்பாலும் வெள்ளையின மாணவர்களால் நடத்தப்பட்டவை. அவற்றை வெள்ளையின ஆளும் வர்க்கம் கண்டித்தது. கூடுமானவரைக்கும் கட்டுப்படுத்த முயன்றது. எல்லை மீறியபோது அந்தப் போராட்டங்களையும் இரும்புக்கை கொண்டு அடக்கத் தயங்கவில்லை.
மே 1970 இல் கெண்ட் மாநிலக் கல்லூரியில் நடந்த அத்தகைய போராட்டம் ஒன்றில் நான்கு மாணவர்களைச் சுட்டுக் கொன்றது ஒகையோ மாநிலப் பாதுகாப்புப்படை. இறந்த மாணவன் ஒருவனின் உடலருகே பதறியழும் ஒரு மாணவியின் படம் அமெரிக்காவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இத்தகைய போராட்டங்கள் பொதுமக்களின் மனங்களை வியட்நாம் போருக்கு எதிராகத் திருப்புவதில் வெற்றி கண்டன. அமெரிக்க அரசும் வேறு வழியின்றி வியட்நாம் போரில் இருந்து விலக வேண்டிவந்தது.
கிட்டத்தட்ட இதேபோன்ற நிலைதான் இந்தியப் போராட்டங்களிலும் இருக்கிறது. ஆளும் வர்க்கம் ஈடுபடாத போராட்டங்களை, நடுத்தட்டு மக்கள் கலந்து கொள்ளாத போராட்டங்களை, இரும்புக்கை கொண்டு அரசு நசுக்குவதற்கு அரசுகள் தயங்காதற்குக் காரணம், அப்படி நசுக்குவதைத்தான் ஆளும் வர்க்கமும், நடுத்தட்டு வர்க்கமும் விரும்புகின்றன. அவர்களைப் பொறுத்த மட்டில், இத்தகைய போராளிகள் வேலையற்ற வீணர்கள், காலிகள், படிப்பு வராத பொறுப்பற்ற கும்பல், அடித்துத் திருத்தினாலொழிய திருந்தாத சென்மங்கள் – அவ்வளவே. இந்த வர்க்கங்களின் ஊடகங்கள், நாளேடுகள், தொலைக்காட்சிகள் இவையும் செய்திகளை அத்தகைய கண்ணொட்டத்தில்தான் காட்டும். வரலாறுகளை எழுதுபவர்களும் இந்த ஊடகச் செய்திகளின் அடிப்படையில் எழுதும்போது இதே கண்ணோட்டத்தையே எதிரொலிக்கிறார்கள். இதனால்தான் மாற்று ஊடகங்களும், மக்கள் வரலாறுகளும், உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிவதற்கு இன்றியமையாதவை.
இத்தகைய போராட்டங்களால் உந்தப்பட்ட மாணவர்கள் சிலர், இடதுசாரிக் கோட்பாடுகளின் கண்ணோட்டத்தில் வரலாற்றை அணுகத் தொடங்குவது இயல்பே. கடந்த சில பத்தாண்டுகளில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் இடதுசாரி சார்புள்ள பேராசிரியர்கள் அமெரிக்க வரலாற்றைக் கற்பிக்கத் தொடங்கினார்கள். அமெரிக்காவின் கொடுங்கோன்மையைப் பாடநூல்களில் சேர்த்தார்கள். பள்ளிப்பாடங்களையும் திருத்தினார்கள். இவற்றால் அமெரிக்காவின் வலதுசாரிகள் பெரிதும் கலக்கமடைந்தார்கள். அமெரிக்காவின் தீவிர வலதுசாரிகள் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களை அமெரிக்காவின் எதிரிகளாகப் பார்க்கும் பார்வை இவற்றிலிருந்துதான் எழுந்தது. இன்று அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் மீது கடுமையான கட்டுப்பாடுகளை அமெரிக்க அதிபர் விதிப்பதற்கும், அரசு நல்கைகளை இறுக்குவதற்கும் பின்னணி இதுதான்.
தற்போது அமெரிக்காவில் நடக்கும் போராட்டங்களில் பல வார இறுதிகளில் நடப்பதற்குக் காரணம் அவை நடுத்தட்டு மக்களின் போராட்டங்கள். தங்கள் அன்றாட வாழ்க்கை சீர்குலையாமல், அலுங்காமல் நலுங்காமல் நடத்தும் போராட்டங்கள்தாம் இவை. பெருநகரங்களில் அன்றாடம் நடக்கும் போராட்டங்களோ அடித்தட்டு மக்களின் போராட்டங்கள். இரண்டையும் காவல்துறை அணுகும் விதம் வெவ்வேறாக இருப்பதன் பின்னணி இதுதான். அடித்தட்டு மக்களின் போராட்டங்களுக்கும் கூட அமெரிக்க இடதுசாரி மாநிலங்களின் ஆட்சியாளர்களின் ஆதரவு இருப்பதால்தான், அடக்குமுறை ஓரளவுக்காவது கட்டுப்பட்டிருக்கிறது. இல்லையேல் இன்றைய அமெரிக்கா 1960களின் அமெரிக்கா போலத்தான் கொழுந்து விட்டு எரிந்திருக்கும்.
பொதுவாகவே அமெரிக்க மக்கள் கூட்டமாகத் திரளும்போது கூடப் பிறரிடமிருந்து எட்டியே நிற்பவர்கள். தனியாள் இடைவெளி (personal space) என்பது ஒன்றரையடியிலிருந்து நான்கடி இடைவெளி. மதுரைக் கள்ளழகர் திருவிழா, திருப்பதி வரிசை போன்ற நெரிசல்களை அமெரிக்காவில் நினைத்தும் பார்க்க முடியாது. அரசியல் கூட்டங்களில் 15,000 பேர் திரண்டால் அது மாபெரும் கூட்டம். இசைநிகழ்ச்சிகளில் இளைஞர்கள் கூடும் பெருந்திரள்களில் மட்டுமே நெரிசல்கள் கூடுதல். அவற்றில் மட்டும்தான் தனியாள் இடைவெளி ஓரடிக்கும் குறைவாக இருக்கும். அதனால்தான், அத்தகைய திரள்களில் மந்தையோட்டம் (stampede) நடந்தால் மனிதர்கள் இறப்பதற்கும் அடிபடுவதற்கும் வாய்ப்பு கூடுதல்.
இணைப்பில் உள்ள படத்தில் தனியாள் இடைவெளி அமெரிக்க அளவின் படி மிகக்குறைவே. இத்தகைய கூட்டம் ஒன்றில் காவல்துறை அடிதடியோ, கண்ணீர்ப்புகையோ, துப்பாக்கிச்சூடோ நடந்தால், மந்தையோட்டத்தால் மக்கள் இறக்கும் வாய்ப்பு கூடுதல். என்றாலும், இவற்றில் கலந்து கொள்பவர்கள் நடுத்தட்டு மக்கள் என்பதாலும், இவற்றில் முதியோர், பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் கலந்து கொள்வதாலும், காவல்துறை அப்படிப்பட்ட அடக்குமுறையில் ஈடுபடும் வாய்ப்பு வெகு குறைவு. மேலும் பெருந்திரள்களைக் கண்காணிக்கும் நுட்பத்தை வைத்துக் கொண்டு, தற்செயலாக மந்தையோட்டம் தொடங்கிவிடாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.
எல்லாவற்றிலும் அமெரிக்கர்களைப் பின்பற்றத் துடிக்கும் இந்திய நடுத்தட்டு வர்க்கம் இவற்றிலிருந்தும் ஏதாவது பாடங்களைக் கற்றுக் கொள்ளுமா என்று நானும் பார்க்கிறேன். ஊகூம். ஒன்றும் கண்ணில் படவில்லை.
நாட்டின் போக்கு மாறவேண்டும் என்றால், நடுத்தட்டு மக்களும் போராட்டங்களில் கலந்து கொண்டால்தான் முடியும். என்றென்றும் அடிவாங்குவது ஏழைமக்களும் ஒடுக்கப்பட்டோரும் என்றால், மாற்றங்கள் மிக மிகக் கடினம். அப்படி வரக்கூடிய மாற்றங்கள் பெரும்புரட்சியாகத்தான் இருக்கும். புரட்சிகள் எழும்போது அடிவாங்கப் போவது என்னவோ நடுத்தட்டு மக்கள்தாம். செல்வந்தர்கள் எப்படியாவது தப்பியோடிவிடுவார்கள்.
அதேபோல், பெருந்திரள்களில் மந்தையோட்டங்கள் ஏற்படாமல் தடுக்கவும், அப்படி ஏற்படும் வாய்ப்பு இருந்தால் மக்களை எச்சரிக்கவும் நுட்பங்கள் ஏன் இந்தியாவில் இதுவரை மேம்படவில்லை என்று எண்ணிப்பார்த்தால், இவற்றுக்கும் மேல்தட்டு, நடுத்தட்டு வர்க்கங்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்பது புலப்படும்.
நம்முடைய குடும்பத்தினர் நசுங்கி அடிபடக்கூடும் என்றால் நாம் அவற்றில் கலந்து கொள்வதைத் தவிர்ப்பதுதான் அறிவுடைமை என்பவர்கள் இவர்கள். அப்படிக் கலந்து கொள்வதும், போராடுவதும், அரசியல் கூட்டங்களுக்குச் செல்வதும் அடிப்படை மக்களாட்சி உரிமை என்ற எண்ணம் இவர்களுக்குக் கிடையாது. அப்படி இருந்திருந்தால், இதற்குள் மந்தையோட்டத்தடுப்பு, பாதுகாப்பு பற்றிய நுட்பங்களைப் பன்மடங்கு மேம்படுத்தியிருப்போம். மக்கள் பெருந்திரளாகக் கூடும் இடங்களில் எச்சரிக்கை விளக்குகளை நட்டுவைத்திருப்போம். கூட்டங்கள் நெரிசலாவதைத் தடுக்க எண்ணற்ற பாதுகாப்பு நெறிகளை வகுத்திருப்போம். ஏன் எங்கள் மக்களைப் பாதுகாக்கவில்லை என்று காவல்துறையை நெருக்கியிருப்போம்.
ஏன் இவையேதும் நடக்கவில்லை?
ஏனென்றால் இவையெவற்றையும் நம்முடைய சிக்கல்களாக நடுத்தட்டு, உயர்தட்டு மக்கள் பார்ப்பதில்லை. இவை மற்றவர்களின் சிக்கல், மற்றவர்களின் துன்பம். நமக்கென்ன என்று விட்டேற்றியாகச் செல்கிறோம். இந்த முட்டாள்களுக்கு வேண்டும் என்கிறோம். நம்முடைய ஊடகங்களும் நம்மைப் போன்றே அரக்கத்தனமானவைதாம். அவை நம்மைத்தானே எதிரொலிக்க முடியும்?
மணி மணிவண்ணன்
அக்டோபர் 19, 2025