என் அரசியல் புள்ளியின் துவக்கம் திமுகவோ பெரியாரோ இல்லை. மோடி தான். குஜராத் மாடல் அலையால் ஈர்க்கப்பட்டு பெரும் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருந்த பொழுது, பணமதிப்பிழப்பு நடவடிக்கை தான் சிந்திக்க தூண்டியது. அது தொடர்பான செய்திகளை சேகரிக்க துவங்கியது தான் அரசியல் துவக்கம்.
எங்கள் வீட்டில் யாரும் அரசியல் பேச மாட்டார்கள். முன்பு சித்தப்பா மட்டும் திமுக ஆதரவாளராக இருந்தார். இப்பொது இல்லை. புதிய மாற்றத்திற்காக காத்திருக்கும் சமூகத்தில் அவரும் ஒருவர். மக்கள் நீதி மையத்தை தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தை எதிர்பார்த்து காத்திருப்பவர்.
பணமதிப்பிழப்பு தொடர்பாக காணொளிகள் பார்க்க துவங்கி பின்பு விவாதங்கள் பார்க்கும் வழக்கம் ஏற்பட்டது. ஒவ்வொரு அமர்விலும் குறைந்தது 4 பேர் விவாதிப்பார்கள். அதில் குறைந்தது 2 பேராவது சண்டையிட்டு கொள்வார்கள். அவர்கள் எல்லாம் யார் என்றே தெரியாது. அனைவரும் புதிது. அவர்கள் கருத்தை எடுத்து வைக்கும் பொழுது, இவர் கொடுக்கும் வாதம், சரியானதாக இருக்கிறதே என்று அவரை கவனிக்க துவங்கும் பொழுது, ஏதோ ஒரு புள்ளியில் (அதே விவாதம், அல்லது வேறு விவாதம்) பெரியாரிடம் கொண்டு சென்று நிறுத்துவார். அப்படி தான் எனக்கு பெரியார் அறிமுகம். அதனை தொடர்ந்து தான் கலைஞர், அண்ணா , திமுக அறிமுகம்.
இந்த பாதையில் யாரும் என்னை தள்ளவில்லை. சொந்த ஆர்வத்தில், படித்து, பார்த்து, கவனித்து இது சரியாக இருக்கிறது என்று தேர்ந்தெடுத்த பாதை, கொள்கை.
கொஞ்சமாக அரசியல் தொடர்பாக எழுத துவங்கிய பொழுது, திராவிட அரசியல் சார்பாக தான் பதிவுகள் அனைத்தும் இருந்தது. ஆரம்ப காலகட்டங்களில் திமுகவை விமர்சித்து ஓரிரு வரிகள்/பதிவுகள் எழுதியதுண்டு. திமுகவை ஆதரித்து எழுதும் பதிவுகளில் அத்தனை கேள்விகள் வரும். திமுக என்பதில் அண்ணா, கலைஞர் அடக்கம். அந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லும் பொழுதும், திமுகவிற்கு ஆதரவாக பதிவுகள் எழுதும் பொழுதும், திமுக சொம்பு என்று விமர்சிக்கப்பட்டதுண்டு. பதிவில் தவறு இருந்தால் சுட்டி காட்டுங்கள் என்றால் பதில் இருக்காது, அல்லது அவதூறு இருக்கும். காலப்போக்கில் , திமுகவை விமர்சிப்பதையே நிறுத்திக் கொண்டேன். அதற்கு ஒரே காரணம், தேவை இல்லாமல் திமுக மேல் பரப்பப்படும் அவதூறுகள்.
பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின சமத்துவ அமைப்பு ஒன்று சென்னை இருந்து கரூருக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தி இருக்கிறார்கள். அதில் பத்திரிகையாளர்கள் சிலர், அவர்களிடம் இருந்து பதிலை பெறுவதை விட, கேள்வி கேட்டு அவர்களை முடக்க நினைக்கும் தொனி தான் பிரதானமாக இருந்தது. குறிப்பாக கூட்டத்தில் விஜய் மீது செருப்பு எரிந்ததை பற்றிய கேள்வி எழுப்பப்பட்ட பொழுது, ஏன் எறிந்தார்கள் என்ற விளக்கத்தை வாங்கவே மறுத்தார் அந்த பத்திரிகையாளர்(!). ‘செருப்ப எரிஞ்சாங்கனு தானு சொல்றேன். ஏன்னு காரணம் தெரிய வேண்டாமா ?’ என்று அவர் கேட்பதை கொஞ்சமும் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை.
41 உயிர்கள் போனதற்கு திமுக தான் காரணம் என்பதை மக்கள் மனதில் மிக ஆழமாக பதிய வைக்கும் விதமாக பல அவதூறுகளும் திமுக மேல் தான் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்த விமர்சனங்களில், திமுக மேல் வைக்கப்படும் கற்றசாட்டுகளில் (பெரும்பான்பை அவதூறுகள்) 25% கூட தவெக மேல் வைக்கப்படவில்லை. Tribes தங்கள் தளத்தில் அம்பலப்படுத்தவில்லை என்றால், உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகள் கூட போலியானவை என்பதை அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு தான் தொலைக்காட்சி செய்திகள் இருக்கின்றன.
சென்ற வாரம் அம்மா சொன்னது, வீட்டில் அருகில் இருக்கும் அம்மாவின் நண்பர்கள் ‘அடுத்து விஜய் கட்சி தான் ஆட்சிக்கு வரப்போகிறது, அவன் வரட்டுமே. என்ன செய்றான்னு பாக்கலாம்’ என்று. கேட்க கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. தன் கூட்டத்தால் 41 பேர் கொல்லப்பட்டபோதும், விஜய் மேல் எந்த விமர்சனமும் இல்லாததற்கு காரணம் என்னவாக இருக்கும். அவதூறுகள். முதலில் 20 லட்ச நஷ்ட(?) ஈடு என்று சொல்லி , பின்பு மாதம் ரூ 5000 என்றார்கள். இப்பொது கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்திப்பதாக இருந்த நிகழ்ச்சியை ரத்து செய்திருக்கிறது தவேக . இதெல்லாம் பேசு பொருள் ஆகாமல் , இன்னமும் திமுகவை நோக்கியே கேள்விகள் எழுந்து கொண்டிப்பது தான் உண்மையான அரசியல்.
அரசியல் ஈடுபாடு இல்லாமல் வந்ததிகள் நம்பும் மக்கள் ஒருபுறம் என்றால், வெறும் திமுக எதிர்ப்பை மட்டுமே கொள்கையாக கொண்டு இன்னமும் விஜய் மேல் தப்பே இல்லை என்ற ‘நடுநிலைகளின்’ பதிவுகளை பார்க்கும் பொழுது, 2026 தேர்தலில் விஜய் முதலமைச்சர் ஆவர் என்ற எண்ணம் மக்கள் மனதில் எப்படி விதைக்கப்படுகிறது என்று புரிகிறது.
கரூர் துயரம் குறித்து தோழர் மருதையன் பேசியதின் ஒரு சாரம், ஆரம்ப காலம் முதல் திமுக எப்படி கட்டம் கட்டி வஞ்சிக்கப்படுகிறது என்பதே. ஒன்றுமில்லாத 2G ஊழல், ராஜிவ் கொலை, சட்டமன்றத்தில் ஜெயலலிதா சேலையை பிடித்து இழுத்தது, சர்க்காரியா கமிசன் என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் திமுக பலி வாங்கப்பட்டிருக்கிறது.
நண்பர்கள் மற்றும் உறவினர்கள் திமுக மீதான விமர்சனத்தை என்னிடம் கேட்பதுண்டு. அதன் வாதங்களில், திமுக தவறு செய்த இடங்களை நான் ஒத்துக்கொள்ளும் நேர்மை, திமுக மேல் வைக்கப்படும் அவதூறுகளுக்கு பதில் அளிக்கும் பொழுது, எதிர்தரப்பு ஒருபோதும் ஒப்புக்கொள்வதில்லை. உண்மையை விட பொய்கள் அதிக சுவாரஸ்யமாக தான் இருக்கிறது.
எந்த சார்பும் இல்லாமல், யார் வலியுறுத்தலும் இல்லாமல் எடுத்த முடிவு தான் திமுக ஆதரவு. பெரியார் சொன்னது போல என் அறிவிற்கு அது தான் சரி என எடுத்த முடிவு. நாளைக்கு இந்த முடிவு மாறும். இன்று திமுகவிற்கு ஆதரவாக பேசும் மருதையன் போன்ற தோழர்கள் பலரும் முன்னர் திமுகவின் கடும் விமர்சகர்கள். இப்பொது இந்த நிலைப்பாட்டை எதற்கு எடுத்திருக்கிறார்கள் என்பதற்கான விடை தான் என் திமுக ஆதரவிற்கான விடை.
சமூக வலைத்தளங்கள் மட்டும் இல்லையென்றால், இந்நேரம் 41 உயிர் பலிக்கு இந்நேரம் திமுக சிலுவையில் அறையப்பட்டிருக்கும்.
சுமதி விஜயகுமார்