
முன் ஜாமீன் கிடைப்பதற்கு முன்பே கைதாவதை தவிர்க்கும் விதமாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஜாமீன் பெறுவதில் தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார். இப்போதைக்கு அவர் தலைமறைவாக இருக்கிறார். கரூர் துயரச் சம்பவ வழக்கில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார். விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாளை இந்த வழக்கில் விசாரணை நடக்க உள்ளது. இந்த நிலையில்தான் புஸ்ஸி ஆனந்திற்கு ஜாமீன் கிடைக்குமா என்ற கேள்வி நிலவி வருகிறது. அவர் மீது 4 பிரிவுகளில் வழக்கு போடப்பட்டு உள்ள நிலையில், 2 பிரிவுகள் ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவுகள் ஆகும். இதில் அந்த 2 பிரிவுகளை நீக்க வேண்டும் என்றும் கோர்ட்டில் புஸ்ஸி ஆனந்த் தரப்பு கோரிக்கை வைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில்தான் தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை கைது செய்ய தனிப்படை தீவிரம் காட்டி வருகிறது. ஆனந்த்-க்கு நெருக்கமான நிர்வாகிகளிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சேலம் மாநகர், ஏற்காடு, கருமந்துறை பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. முதலில் ஏற்காட்டில் புஸ்ஸி ஆனந்த் தங்கி இருந்தார். அவர் போன் நம்பரை மாற்றிவிட்டு அங்கே இருந்துள்ளார். ஆனால் அதையும் கண்டுபிடித்து போலீசார் அவரை தொடர்ந்து வந்துள்ளனர்.
இப்போது அவர் சென்ற இடங்களை அடிப்படையாக வைத்து, நாமக்கல், ஈரோடு, சென்னை மாவட்டங்களிலும் தனிப்படை தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இப்போதைக்கு புஸ்ஸி ஆனந்த் தலைமறைவாக இருக்கிறார். கைதில் இருந்து தப்பிக்க வேண்டும் என்று புஸ்ஸி ஆனந்த் தீவிரமாக இருக்கிறாராம். புஸ்ஸி ஆனந்த் தமிழக வெற்றிக் கழகம் உள்ளே என்ன நடக்கிறது.. இப்போது நடக்கும் பிரச்சனையை எப்படி சரி செய்வது.. விஜய்க்கு ஆதரவாக என்ன நடவடிக்கை எடுப்பது என்று எதை பற்றியும் புஸ்ஸி ஆனந்த் கவலைப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆனந்தை கைது செய்ய ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்த் தலைமையிலான 3 தனிப்படைகள் தீவிரம் காட்டி வருகிறார்கள். அவர் கொங்கு மண்டலத்தில் பதுங்கி இருக்கலாம் என்று போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரூர் போலீஸ் எப்ஐஆர் கரூரில் நடைபெற்ற அரசியல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த கோர சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், “அரசியல் பலத்தை காட்டும் நோக்கில் கூட்டம் திட்டமிட்டு 4 மணி நேரம் தாமதமாக துவக்கப்பட்டது. தொண்டர்கள் மரங்கள் மற்றும் கடைகள் மீது ஏறி அமர்ந்தனர். இதில் மரக்கிளைகள் முறிந்து கீழே நின்றவர்கள்மீது விழுந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
புஸ்ஸி ஆனந்த் திட்டம் என்ன?
அனைத்து எச்சரிக்கைகளையும் புறக்கணித்ததாக, ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் மீது குற்றச்சாட்டு விதிக்கப்பட்டுள்ளது. நீண்ட நேரம் காத்திருத்தல், குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகளின் இல்லாமை, கூட்ட நெரிசலில் ஏற்பட்ட அழுத்தம் ஆகியவற்றால் மக்கள் உடல் நிலை சோர்ந்து கீழே விழுந்ததாகவும், அவர்கள் மிதிபாடுகளில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததாகவும் எஃப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகின்றது. இதையடுத்தே தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை விரைவில் கைது செய்ய போலீஸ் தீவிரம் காட்டி வருகிறார்கள்.